Friday, May 2, 2008

வினைப்பயன்களா? அப்படியென்றால்? வேரறுத்துவிடும் இந்த லிங்கம் (லிங்காஷ்டகம் 4 & 5)


கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'லிங்காஷ்டகம்' பதிவில் 21 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

12 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்

மூலமும் எளிமை
உங்கள் மூலமாக, பொருளும் எளிமை!

//ஸஞ்சித பாப விநாசன லிங்கம்//

சஞ்சிதம் = போன பிறவிகளில் சேர்த்த வினைகள்; savings account; பழவினை
பிரார்த்தம் = அது போதாதென்று இந்தப் பிறவியில் சேர்க்கும் current account; நுகர் வினை
ஆகாமியம் = இனி வரும் பிறவிகளில் சேர்க்கலாம் என்று இருக்கும் futuristic account = வருவினை

இப்படி எல்லா வினைகளையும் பொடிப்பொடியாக்கும் சிவலிங்க வணக்கம் மிக அருமை!
'போய பிழையும் புகுதருவான் நின்றனவும். தீயினில் தூசாகும்' அல்லவா, தீ ஏந்தும் ஈசனைத் தொழுதால்! சிவசிவ!!

9:11 AM, October 22, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி இரவிசங்கர்.

சஞ்சிதம், பிராரப்தம், ஆகாம்யம் என்ற மூன்றுவித வினைகளின் தொகுதிகளைப் பற்றி நான் படித்த விளக்கம் சிறிது மாறுபட்டு இருக்கின்றனவே.

சஞ்சிதம் - இதுவரை பல பிறவிகளில் சேர்த்து வைத்த புண்ணிய பாவங்கள்.
பிராரப்தம் - இந்தப் பிறவியில் பயன் தரத் தொடங்கியிருக்கும் புண்ணிய பாவத் தொகுதி.
ஆகாம்யம் - இந்தப் பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்கள் - இது இந்தப் பிறவியிலும் பயன் தரும்; சஞ்சிதத்திலும் சேர்ந்து கொண்டு அடுத்தப் பிறவியின் ப்ராரப்தத்திலும் வரலாம்.

இறைவன் அருளால் இறை ஞானம் வரும் போது சஞ்சிதமும் ஆகாம்யமும் அழிந்து பட்டுப் போகும். போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும். ஆனால் ப்ராரப்தம் அனுபவித்தே தீரும். அதுவே இரமணருக்கும் இராமகிருஷ்ணருக்கும் வந்த புற்றுநோயின் விளக்கமாகச் சொல்லப்படுவது.

10:41 AM, October 22, 2006
--

வல்லிசிம்ஹன் said...
குமரன் திங்கள் கிழமை
சிவனைத் தொழும்படி

லிங்காஷ்டகம் பதிவு செய்தது
நன்மை.

முக்கூரின் குறையொன்றுமில்லை
படிக்கும் இனிமை இருந்தது.
அவர் ரொம்பப் புண்ணியமும் செய்யக்கூடாது என்று சிரிப்புடன் சொல்லுவார்.
நன்றி குமரன்.

6:54 AM, October 23, 2006
--

குமரன் (Kumaran) said...
வல்லி அம்மா. முன்பு கோளறு பதிகம் எழுதும் போதும் ஒவ்வொரு ஞாயிறன்று எழுதி நீங்கள் திங்களன்று படிக்கும் படி அமைந்தது. அதனைப் பலமுறை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதனை மனதில் கொண்டு தான் லிங்காஷ்டகத்திற்கும் திருநீற்றுப் பதிகத்திற்கும் பொருளினை நீங்கள் திங்களன்று படிக்கும்படி பதிவில் இடுகிறேன். மிக்க நன்றி.

உண்மை. முக்கூர் ஆசார்யர் சொன்னது சரியே. புண்ணியமும் பாவமும் இரண்டும் தீர்ந்தால் தான் விடுதலை கிட்டும். அது வரை மீண்டும் மீண்டும் பிறப்பே. பாவம் இரும்புச் சங்கிலி என்றால் புண்ணியம் பொன்னால் செய்த சங்கிலி. அதனால் தானே கீதாசார்யன் வினையின் பயனை விடுக்கச் சொல்கிறான். வினையின் மீதும் வினைப்பயனின் மீதும் பற்றுதல் இருக்கும் வரை வினைப்பயன்களை அனுபவித்தே ஆக வேண்டும். பற்றுதல் நீங்கும் போது விடுதலை தானே கிடைக்கிறது. புண்ணியம் தீரும் வரை மகான்களாய் பிறக்கவேண்டியிருக்கும்.

9:20 AM, October 23, 2006
--

தி. ரா. ச.(T.R.C.) said...
சோம வாரத்தன்று சிவ நாமம் சொல்ல வைத்து அதுவும் மூன்றாம் பிறையை பிறைசூடிக்கொண்ட சந்திரசேகரனை வண்ங்க வைத்ததற்கு நன்றி.

9:53 AM, October 23, 2006
--

சிவமுருகன் said...
அண்ணா,

வழக்கமாக அருமையான விளக்கங்கள்.

இருபதிகத்தை ஒரே பதிவாக ஏன் இட்டீர்கள் தனியாகவும் இட்டலமே?.

11:38 AM, October 23, 2006
--

குமரன் (Kumaran) said...
வணக்கம் சந்திரசேகரன் (தி.ரா.ச.)

சோமவாரத்தன்று மட்டுமா என்றுமே எப்பொழுதுமே சந்திரசேகரனை வணங்க அருள் செய்ய வேண்டும்.

11:39 AM, October 23, 2006
--

குமரன் (Kumaran) said...
சிவமுருகன். சின்னதாகத் தானே இருக்கின்றது. விரைவில் நிறைவு செய்யலாம் என்று தான் இரண்டு பாகத்தையும் ஒன்றாக இட்டேன்.

11:41 AM, October 23, 2006
--

ஜயராமன் said...
very good

thanks

11:54 AM, October 23, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி ஜயராமன்.

11:55 AM, October 23, 2006
--

Merkondar said...
நல்ல பதிவு

8:27 PM, October 23, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி என்னார் ஐயா.

7:45 PM, October 24, 2006