Saturday, May 3, 2008

தாமரை இலை மேல் நீரைப் போல் நிலையற்றது வாழ்க்கை (பஜ கோவிந்தம் 4)


நளிநீ தள கத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம் ச சமஸ்தம்

நளிநீ தள கத ஜலம் - தாமரை இலையில் தங்கி இருக்கும் நீரானது

அதிதரளம் - நிலையில்லாதது.

தத்வத் - அது போல

ஜீவிதம் - வாழ்க்கையும்

அதிசய சபலம் - மிகவும் நிலையில்லாதது

லோகம் ஸமஸ்தம் - இந்த உலகில் எல்லாமும் எல்லாரும்

வ்யாதி அபிமான க்ரஸ்தம் - வியாதியாலும் தற்பெருமையாலும் விழுங்கப்பட்டவர்கள்

- மேலும்

சோக ஹதம் - (அந்த வியாதியாலும் தற்பெருமையாலும் ஏற்படும்) சோகத்தால் அழிக்கப்பட்டவர்கள்

வித்தி - இதை நீ அறிவாய்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.

***

முதல் பகுதி 26 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. இரண்டாம் பகுதி 3 மே 2008 அன்று சேர்க்கப்பட்டது:

தாமரை இலை மேல் தத்தளிக்கும் நீரை இரண்டுவிதமாக உவமித்திருக்கிறார்கள் மூத்தோர். தாமரை இலை மேல் நீர் எப்படி இலையுடன் ஒட்டாமல் இருக்குமோ அது போல் பற்றின்றி இருக்க வேண்டும் என்று சில இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதே உவமையை நிலையில்லாத வாழ்க்கைக்கு உவமையாக ஆதிசங்கரர் இங்கே கூறுகிறார். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அது எவ்வளவு உண்மை என்பது தெரிகிறது. இறப்பு எந்த வகையில் எப்போது வரும் என்று சொல்ல முடியாதபடி தானே இருக்கிறது. நெருநல் இருந்தார் இன்றில்லை - நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை என்று வள்ளுவப் பெருந்தகையும் இந்த உலக வாழ்க்கையைப் பற்றி சொல்கிறாரே. அந்த வகையில் பார்த்தால் தாமரை இலையின் மேல் தத்தளிக்கும் நீர்த்துளி வாழ்க்கைக்கு ஒரு சிறந்த உவமை.

இதனைச் சொன்னவர் ஆதிசங்கரர் என்பதால் அவருடைய தத்துவமான அத்வைதமும் இங்கே கொஞ்சம் வருகிறதோ என்று தோன்றுகிறது. தாமரை இலையின் மேல் தத்தளிக்கும் நீர்த்துளி தனி நீராகத் தோன்றினாலும் குளத்தில் இருக்கும் நீரும் அந்த நீர்த்துளியும் ஒன்றே. இலையிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் அந்த நீர்த்துளி குளத்தில் இருக்கும் நீருடன் கலந்து தனது தனித்தன்மையை இழந்துவிடும். முக்தியெனும் விடுதலையைப் பெறும் சீவனும் அந்த வகையில் பரம் எனும் எங்கும் நிறை இறையுடன் கலந்து தன் தனித்தன்மையை இழக்கும். அல்லிருமை (அத்வைதம்) தத்துவம் சொல்வதை இங்கே குறிப்பாகச் சொல்லுகிறாரோ என்று தோன்றுகிறது.

அடுத்து மிக முக்கியமான இரண்டு குறைகளைச் சொல்கிறார். வியாதி, அபிமானம் - நோயும் தற்பெருமையும் என்று இரண்டையும் அடுத்தடுத்து சொல்வதால் தற்பெருமையும் ஒரு பெரும் நோய். அது வாழ்க்கையை அழித்துவிடும் என்று சொல்லாமல் சொல்கிறார் என்று தோன்றுகிறது.

உலகில் எல்லோரும் 'சோகத்தால் அழிக்கப்பட்டவர்கள்' என்று இறந்த காலத்தில் சொல்வதும் சுவையாக இருக்கிறது. அது முடிந்த முடிபாகவே சொல்கிறார் சங்கரர். சோகத்திலிருந்து தப்பியவர் யாரும் இல்லை என்பதால் அப்படிச் சொன்னாரோ என்று தோன்றுகிறது.

17 comments:

jeevagv said...

தாமரை இலை நீர் போல், வாழ்க்கை இன்ப துன்பங்களில் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் இருக்க வேண்டுமோ!

வால்பையன் said...

உங்களை போல் இறை நம்பிக்கையாளர்களால் தான், என்னை போல் இறை மறுப்பாளர்கள் பதிவு போட வேண்டியிருக்கிறது, தயவுசெய்து உங்கள் நம்பிக்கையை உங்களோடு வைத்துகொள்ளுங்கள் எங்களையும் சீண்டி விடாதீர்கள்

வால்பையன்

வால்பையன் said...

உங்களை போல் இறை நம்பிக்கையாளர்களால் தான், என்னை போல் இறை மறுப்பாளர்கள் பதிவு போட வேண்டியிருக்கிறது, தயவுசெய்து உங்கள் நம்பிக்கையை உங்களோடு வைத்துகொள்ளுங்கள் எங்களையும் சீண்டி விடாதீர்கள்

வால்பையன்

குமரன் (Kumaran) said...

வால்பையன்.

நீங்கள் சொல்வது புரியவில்லை. உங்கள் பதிவிற்கோ வேறெங்காவது இறைமறுப்பு பேசப்பட்ட இடத்திற்கோ வந்து நான் இந்த இடுகையில் சொன்னதைச் சொன்னேனா? உங்களைச் சீண்டி விடுவதாகக் கூறுகிறீர்களே? எங்கள் நம்பிக்கையை எங்களோடே வைத்துக் கொண்டு எங்கள் பதிவுகளில் தான் எழுதிக் கொண்டிருக்கிறோம். தயவு செய்து தேவையில்லாமல் என் உரிமையில் தலையிட வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். என் நம்பிக்கையைப் பற்றி என் பதிவுகளில் எழுத யாருடைய அனுமதியும் தேவையில்லை என்பதை நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றிகள்.

வால்பையன் said...

உங்கள் பதிவிற்கு நேரடியாக எதிர் பதிவு போட்டால் கோபப்பட மாட்டிர்கள் தானே

வால்பையன்

குமரன் (Kumaran) said...

வால்பையன்,

1. அது உங்கள் உரிமை. என் பதிவிற்கு எதிர்பதிவு என்றில்லாமல் இந்த இடுகையில் இருக்கும் கருத்திற்கு மாற்றுக் கருத்து என்றிருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். ஆனால் நீங்கள் என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லுவது முறையில்லை.

2. நான் சினந்தால் என்ன சினம் கொள்ளாவிட்டால் என்ன? அது உங்கள் கருத்தைச் சொல்ல பொருட்படுத்த வேண்டியதில்லை.

3. நான் சினந்தால் நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளப் போகிறீர்களா என்ன? பின் ஏன் இந்த கேள்வி? உங்களுக்கு என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்படியே எழுதுங்கள். எழுதாமலும் விடுங்கள். உங்கள் உரிமை அது.

4. இப்போதே சொல்லிவிடுகிறேன். என் பெயரையோ என் பதிவின் பெயரையோ நீங்கள் நேரடியாகப் போட்டு எழுதினாலும் நான் விவாதிக்க வரப்போவதில்லை. அதற்கு மனமும் நேரமும் இல்லை. விவாதிக்காமல் இருப்பது என் உரிமை என்று நம்புகிறேன். அதனை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நன்றிகளுடனும் அன்புடனும்,
குமரன்.

குமரன் (Kumaran) said...

பட்டும் படாமலும் வாழும் பற்றற்ற வாழ்க்கைக்குத் தான் தாமரை இலை நீரை பெரும்பாலும் உவமையாகக் கூறுவார்கள் ஜீவா. இந்தப் பாடலில் சங்கரர் வாழ்க்கையின் நிலையின்மைக்கு உவமையாகக் கூறியிருக்கிறார்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"இலையிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் அந்த நீர்த்துளி குளத்தில் இருக்கும் நீருடன் கலந்து தனது தனித்தன்மையை இழந்துவிடும். முக்தியெனும் விடுதலையைப் பெறும் சீவனும் அந்த வகையில் பரம் எனும் எங்கும் நிறை இறையுடன் கலந்து தன் தனித்தன்மையை இழக்கும். " எத்தனை பெரிய உண்மை. பெறுமை கொள்வதற்கும் பேருவுகை கொள்வதற்கும் ஏதுமில்லை இங்கு இந்த உண்மை நெஞ்சில் ஆழ உரைக்குமானால் அல்லவா.

குமரன் (Kumaran) said...

புத்தியால் இவை எல்லாம் புரிந்து கொள்ளப்பட்டாலும் உணர்வு நிலைக்கு வருவதில்லை கிருத்திகா. அதனால் தான் இன்னும் உழல்கிறேன்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

தாங்கள் மட்டுமல்ல குமரன்.. எண்ணற்ற ஜீவராசிகள் இந்த பேரவஸ்தையில் நாளும் கழித்துக்கொண்டுதானிருக்கிறார்கள். சகபுலம்பலில் ஒரு ஆறுதல் அவ்வளவே

குமரன் (Kumaran) said...

உண்மை தான் கிருத்திகா. நன்றிகள்.

உண்மைத்தமிழன் said...

உண்மைதான் குமரன்..

நிலையில்லாத வாழ்க்கையில் நிலையற்ற சுகங்களைத் தேடி நித்தம், நித்தம் மனிதர்தாம் அறிவிலி போல் அலைகின்ற போக்கைத்தான் அலசி ஆராய்ந்திருக்கிறது ஆன்மிகம்..

இதில் உள்ளடக்கத்தை மேம்போக்காக மட்டுமே வாசித்துவிட்டு அறிவுப்பூர்வ விவாதத்திற்குத் தயாராகும் பகுத்தறிவுகளை நாம் புறந்தள்ளி மேலே செல்வோம்.

எல்லாமே 'மறுவீடு' அடையத்தான்.. நாம் முன்பே செல்லுவோம் அமைதியாக.. வருவார்கள் அவர்கள் கலவரமாக..

பட்டு அறிந்து, தெளிந்து இதுதான் இம்மையான நிலையானது என்ற திருப்தியோடு நாம் செல்வோம்..

அறிவான பாடல்.. அழகான விளக்கம்..

குமரனுக்கு எனது நன்றிகள்..

குமரன் (Kumaran) said...

நன்றி உண்மைத் தமிழரே. 'வைகுந்தம் புகுவது மண்ணவ்ர் விதியே' என்று நம்மாழ்வாரும் சொல்லியிருக்கிறார்கள். இப்போதோ இனி எப்போதோ இந்தப் பிறவியிலோ இனி வரும் பிறவிகளிலோ என்றோ எப்போது எல்லோரும் இறைவனை அடையத் தான் போகிறார்கள் என்பது தான் அருளாளர்களும் சொல்வது.

Kavinaya said...

//தாமரை இலையின் மேல் தத்தளிக்கும் நீர்த்துளி தனி நீராகத் தோன்றினாலும் குளத்தில் இருக்கும் நீரும் அந்த நீர்த்துளியும் ஒன்றே. இலையிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் அந்த நீர்த்துளி குளத்தில் இருக்கும் நீருடன் கலந்து தனது தனித்தன்மையை இழந்துவிடும். முக்தியெனும் விடுதலையைப் பெறும் சீவனும் அந்த வகையில் பரம் எனும் எங்கும் நிறை இறையுடன் கலந்து தன் தனித்தன்மையை இழக்கும்.//

அழகாக விளக்கினீர்கள்.

//புத்தியால் இவை எல்லாம் புரிந்து கொள்ளப்பட்டாலும் உணர்வு நிலைக்கு வருவதில்லை கிருத்திகா. அதனால் தான் இன்னும் உழல்கிறேன்.//

கிருத்திகா சொன்னது போல இதே நிலைதான் பெரும்பாலோருக்கு. நாமம் சொல்லி நன்மை பெறுவோம்.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

Geetha Sambasivam said...

. //அல்லிருமை (அத்வைதம்) தத்துவம் //

புதிய வார்த்தை கற்றுக் கொண்டேன்,

தொட்டும் தொடாமலும் எங்கே இருக்கோம், முழுசா மூழ்கி மீண்டு வர முடியாமல் தத்தளித்துக் கொண்டு!!!!! :((((((((

குமரன் (Kumaran) said...

அது இராம.கி. ஐயாவின் சொல்லாக்கம் கீதாம்மா. த்வைதம் - இருமை; அத்வைதம் - அல்லிருமை. தத்துவம் என்பதற்கு மெய்யியல் என்ற சொல்லைப் புழங்குவார். நான் அதனைச் சொல்லாமல் தத்துவம் என்றே சொல்லியிருக்கிறேன்; ஏன் என்று தெரியவில்லை. :-)