Tuesday, May 6, 2008

கோடி சூரியன்களைக் கண்டதுண்டா? (லிங்காஷ்டகம் 6 & 7)


தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்

பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - பாவத்துடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் தோற்றுவிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டுவிதமான மலர்களால் சூழப்பட்ட லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'லிங்காஷ்டகம்' பதிவில் 24 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

23 comments:

கோவி.கண்ணன் [GK] said...
//அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்//

குமரன் ..! மொழிமாற்றம் நன்றாக இருக்கிறது ! ஆனால் விளக்கம் இல்லாமல் படிப்பதற்கு சுவையாக இல்லை !

எட்டுவகையான ஏழ்மைகள் என்ன என்ன என்று விளக்க முடியுமா ?

9:47 PM, October 24, 2006
--

சிவமுருகன் said...
//கோவி.கண்ணன் [GK] said...
//அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்//

குமரன் ..! மொழிமாற்றம் நன்றாக இருக்கிறது ! ஆனால் விளக்கம் இல்லாமல் படிப்பதற்கு சுவையாக இல்லை !

எட்டுவகையான ஏழ்மைகள் என்ன என்ன என்று விளக்க முடியுமா ?

//

கோவி ஐயா,

எட்டுவிதமான செல்வங்களை இல்லாமல் இருப்பது எட்டுவிதமான ஏழ்மை என்று கொள்ளலாமே? (8 X 2 = 16, பிறகு அது 16 செல்வமானது).

அண்ணா,

விளக்கங்கள் வழக்கமாக அருமை.

7:22 AM, October 25, 2006
--

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. சரியான கேள்விகள் தான் கேட்டிருக்கீங்க. பதிவை இடும்போதே கவனித்தேன். எட்டுவித மலர்கள், எட்டுவித ஏழ்மைன்னு சொல்றோம். விளக்கம் சொல்லலையேன்னு. சரியா கேட்டீங்க. :-)

அஷ்ட தரித்ரங்களைப் பற்றி தெரியும் ஆனால் அவை யாவை என்பது பதிவு எழுதும் போது நினைவிற்கு வரவில்லை. சிவமுருகன் சொன்னதைப் போல் அஷ்ட ஐஸ்வர்யங்கள் ஒவ்வொன்றையும் சொல்லி அவை இல்லாமல் இருப்பது அஷ்ட தரித்ரம் என்று சொல்லலாம் என்று எண்ணினேன். ஆனால் அவற்றை உறுதிபடுத்திக் கொள்ள இணையத்தில் தேடினால் பட்டியல் கிடைக்க மாட்டேன் என்கிறது. இப்போதைக்கு எட்டுவித ஏழ்மைகள் என்று இவற்றைச் சொல்கிறேன். பட்டியல் கிடைத்தால் அவை வேறுபட்டு இருந்தால் மீண்டும் வந்து சொல்கிறேன்.

எட்டுவித ஏழ்மைகள்: மகிழ்வின்மை, கல்வியின்மை, குழந்தையின்மை, உணவின்மை, வலிமையின்மை, பெருமையின்மை, வெற்றியின்மை, செல்வமின்மை.

எட்டுவித மலர்கள்: அஹிம்சை, புலனடக்கம், தவம், இரக்கம், பொறுமை, மெய்யறிவு, தியானம், மெய்மை. இவையே இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்குரிய சிறந்த மலர்கள்.

6:47 AM, October 26, 2006
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டுவிதமான மலர்களால் சூழப்பட்ட லிங்கம்
//

"எட்டு கொலாம் அவர் சூடும் இனமலர்" என்று அப்பர் சுவாமிகள் எட்டு வித புஷ்பம் பற்றிப் பேசுவார்.

ஆகமத்தில் அஷ்ட புஷ்பம் என்ற குறிப்பும் உள்ளது. அருகு, அரளி, தும்பை, செண்பகம், நந்தியாவட்டை, பாதிரி, இன்னும் இரண்டு பூக்கள்; சரியாக நினைவுக்கு வரவில்லை!

பூக்களே இல்லாத நிலத்தில் இருந்தால் என்ன செய்வது? மேலே சொன்ன பூக்கள் ஆகம வழிபாட்டில் தான்; கோவில்களில் பொருந்தும்.
நம்முடைய ஆத்ம வழிபாட்டில், மனக் கோவிலுக்கு எட்டு பூக்கள் எவை?
வடமொழி தான் என்றாலும், கொஞ்சம் எட்டித் தான் பார்ப்போமே!

அகிம்சா ப்ரதமம் புஷ்பம் = அகிம்சை
புஷ்பம் இந்திரிய நிக்ரகஹ = புலன் அடக்கம்
சர்வ பூதா தயா புஷ்பம் = அனைத்து உயிர்களின் பால் கருணை
க்ஷமா புஷ்பம் விசேஷத = மன்னிக்கும் குணமே விசேட மலர்

சாந்தி புஷ்பம் = அமைதி
தபா புஷ்பம் = தவம்
தியான புஷ்பம் ததைவச = தியானம்
சத்யம் ச அஷ்ட விதம் புஷ்பம் = உண்மை, சத்தியம் ஆகிய இவை எட்டு வித மலர்கள்!
விஷ்ணூ ப்ரீதிகரம் மகாத் = இவையே விஷ்ணுவுக்குப் பிடித்தமான மலர்கள்!

குமரன் இவற்றில் பலவற்றை ஏற்கனவே பின்னூட்டத்தில் பட்டியல் இட்டு விட்டார். இருப்பினும் கவிதையாகச் சொல்வது இன்னும் அழகாய் இருக்கும் என்பதால், மேலதிகமாகச் சொல்லிவிட்டேன். பொறுத்துக் கொள்ளுங்கள் :-))
வடமொழி தான் என்றாலும், பாடலை மீண்டும் ஒரு முறை வாய் விட்டுப் படித்தால், அழகு புலப்படும்!

அகிம்சா ப்ரதமம் புஷ்பம்
புஷ்பம் இந்திரிய நிக்ரகஹ
சர்வ பூதா தயா புஷ்பம்
க்ஷமா புஷ்பம் விசேஷத

சாந்தி புஷ்பம் தபா புஷ்பம்
தியான புஷ்பம் ததைவச
சத்யம் ச அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணூ ப்ரீதிகரம் மகாத்

11:59 AM, October 26, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன்.

12:21 PM, October 26, 2006
--

குமரன் (Kumaran) said...
விளக்கமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி இரவிசங்கர். நீங்கள் தந்துள்ள சுவாமி தேசிகனின் சுலோகத்திலிருந்து தான் எட்டு மலர்களின் பட்டியலை மேலே கொடுத்தேன்.

அஹிம்சா ப்ரதமம் புஷ்பம் - அஹிம்சை முதல் பூ (அஹிம்சை)
புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ - புலன் அடக்கம் (இராகவன் கவனிக்க: நிக்ரஹம் என்றால் அடக்கமே; அழித்தல் இல்லை) இன்னொரு பூ (புலனடக்கம்)
சர்வ பூத தயா புஷ்பம் - எல்லா உயிர்களின் மேலும் கருணை இன்னொரு பூ (இரக்கம்)
க்ஷமா புஷ்பம் விஷேசத: - மன்னிக்கும் குணம் பெருமை வாய்ந்த பூ (பொறுமை)
சாந்திர் புஷ்பம் - அமைதி என்னும் பூ (அமைதி, மெய்யறிவு)
தபா புஷ்பம் - தவம் என்னும் பூ (தவம்)
தியான புஷ்பம் - தியானம் என்னும் பூ (தியானம்)
தத ஏவை ச - இவைகளுடன்
சத்யம் ச - உண்மையும் ஒரு பூ (மெய்மை)
அஷ்ட விதம் புஷ்பம் - எட்டுவிதமான பூக்கள்
விஷ்ணுர் ப்ரீதி கரம் மஹத் - எங்கும் நிறைந்த இறைவனை (விஷ்ணு - எங்கும் நிறைந்தவன்/தவள்/தது) மகிழ்விக்கும் பெருமை வாய்ந்த மலர்கள்.

அருகு, அரளி, தும்பை போன்ற மலர்களின் பட்டியலையும் கிடைத்தால் மறக்காமல் சொல்லுங்கள். மிக்க நன்றி.

12:31 PM, October 26, 2006
--

G.Ragavan said...
// பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - பாவத்துடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம் //

குமரன் இங்கு ஒரு ஐயம். பாவத்துடன் கூடிய பக்தியா? அப்படியென்றால் பாவமில்லாமலும் பக்தி இருக்குமா? (இதற்கு என்னிடம் ஒரு எளிய விடை உள்ளது. நீங்கள் அதைச் சொல்கின்றீர்களா என்று பார்க்கிறேன்.) ;-)

12:41 PM, October 26, 2006
--

ஜெயஸ்ரீ said...
எட்டுவித புஷ்பங்கள் பற்றிய விரிவான விளக்கத்துக்கு நன்றி KRS.

ஆனால் "தளம்" என்ற சொல்லுக்கு பூவின் இதழ் என்றே பொருள் என நினைக்கிறேன்.
"அஷ்டதள பரிவேஷ்டித லிங்கம் " என்பதற்கு எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம் என்று பொருள் கொள்வதே மேலும் பொருத்தமல்லவா?

2:22 PM, October 26, 2006
--

தி. ரா. ச.(T.R.C.) said...
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்

ஸர்வ = உலகத்தில் எல்லா பொருள்களும்

ஸ்முத்பவ=நன்றாக உருவாதற்கு

காரண=காரணமாக, கருவியாக

லிங்கம்=இருக்கும் லிங்கம்

என்ற பொருள் எனக்கு படுகிறது.

பாவையர்=என்பதை பாவம் என்றுகருதாமல் முகபாவம் பாவித்தல் அது மாதிரி படிக்க வேன்டும் . பக்தி பாவத்தை நம் மனதுள் ப்ரவேசிக்கச் செய்யும் என்றும் கொள்ளலாம்

5:10 AM, October 27, 2006
--

ஜயராமன் said...
அழகான ஒரு ஆன்மீக செறிவுடன் பதிவுகள் மனதை கவர்கின்றதை. மீண்டும் திருப்பபடிக்கத்தூண்டும் அற்புதமான பின்னூட்டங்கள்.

வழங்கிய உங்களுக்கும் பின்னூட்டமிட்ட அனைத்து பண்டிதர்களுக்கும் மிக்க நன்றி.

மேலும் வளரட்டும்....

நன்றி

5:42 AM, October 27, 2006
--

குமரன் (Kumaran) said...
இராகவன், பாவத்துடன் இல்லாத பக்தியென்றால் புண்ணியத்துடன் கூடிய பக்தி தானே?! :-)

5:55 AM, October 27, 2006
--

குமரன் (Kumaran) said...
உண்மை ஜெயஸ்ரீ. 'தளம்' என்றால் இதழ் என்று தான் பொருள். அஷ்ட தளம் என்றால் எட்டிதழ் என்று தான் பொருள் வரும். தாமரை என்று அந்த வரியில் சொல்லப்படவில்லை ஆனால் எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. நன்றிகள்.

5:57 AM, October 27, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றிகள் தி.ரா.ச. ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் என்பதற்கு நீங்கள் சொன்ன பொருள் சரியே.

நேற்று இராகவனின் பின்னூட்டத்தைப் படிக்கும் போது தான் பாவத்துடன் கூடிய பக்தி என்பதற்கு வேறு பொருளும் கொள்ளலாமே என்று தோன்றியது. :-)
எல்லோரும் (இராகவனும்) சரியான பொருளைத் தான் கொண்டிருக்கிறார் என்று தெரியும். ஆனாலும் paavam, bhaavam வேறுபாடு சரியாகத் தெரிவது போல் சொல்லியிருக்க வேண்டும்.

6:00 AM, October 27, 2006
--

குமரன் (Kumaran) said...
பின்னூட்டங்களில் மக்கள் பங்கேற்பு வேண்டுமா? இதோ இன்னொரு வழி. நிறைய விளக்கம் சொல்லாமல் விட்டுவிடுங்கள். படிப்பவர்கள் விளக்கம் சொல்ல வகை செய்யும். :-)

எல்லோரும் வந்து பின்னூட்டங்களில் மேலும் விளக்கங்கள் சொல்லி மெருகூட்டியதற்கு மிக்க நன்றிகள்.

6:02 AM, October 27, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றிகள் ஜயராமன் ஐயா. உங்களின் தொடர் வருகைக்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றிகள்.

6:02 AM, October 27, 2006
--

G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...

இராகவன், பாவத்துடன் இல்லாத பக்தியென்றால் புண்ணியத்துடன் கூடிய பக்தி தானே?! :-) //

:-))))))))) குமரன் உங்கள் விடையைப் படித்து புன்முறுவலோடு சிரிப்பும் வந்தது. என்னைச் சிரிக்க வைத்த புண்ணியம் உம்மைச் சேர்வதாக.

பாவம் என்பதற்கு புண்ணியத்தின் எதிர்ப்பதம் என்ற பொருளில் நான் கேட்கவில்லை. பாவம் என்ற உண்மையான பொருளிலேயே நான் கேட்டேன். அதென்ன பாவத்துடன் கூடிய பக்தி என்று? பாவம் இல்லாமல் பத்தி உண்டா என்பது என் கேள்வி.

ஆனால் நீங்கள் வேறொரு அழகான நகைச்சுவைக் கோணத்திலும் சிந்தித்திருக்கின்றீர்கள். :-) தி.ரா.ச கூட பாவத்தை பாவமாய் ராகவன் எடுத்துக் கொண்டான் என நினைத்து விட்டார் போலும். :-)

நீங்கள் பாவம் என்ற சொல்லிற்கு மாற்றாக உணர்ச்சி அல்லது உணர்வு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் தெளிவாக எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்று சொல்ல வந்தேன். உணர்வு பெருகிய பக்தி...பக்தி என்பதே அன்புதானே...உணர்வு பெருகிய அன்பிற்கான லிங்கம் என்று பொருள் சொன்னால் இன்னும் எளிமையாக அனைவரையும் அடையும் என்ற கருத்தில் நான் சொல்ல வந்தேன்.

6:11 AM, October 27, 2006
--

கோவி.கண்ணன் [GK] said...
//எட்டுவித ஏழ்மைகள்: மகிழ்வின்மை, கல்வியின்மை, குழந்தையின்மை, உணவின்மை, வலிமையின்மை, பெருமையின்மை, வெற்றியின்மை, செல்வமின்மை.//

குமரன் ...!
நீண்ட விளக்கம் எழுதியதற்கு முதற்கண் பாராட்டுக்கள்.

அஷ்ட லக்ஷ்மிகளில் குறைந்தது ஒரு லக்ஷ்மியின் அருளோ, பார்வையோ படாதவர்கள் அஷ்ட தரித்திரர்கள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். சரியா ?

6:59 AM, October 27, 2006
--

ஜெயஸ்ரீ said...
குமரன்,

"அஷ்டதளோபரி வேஷ்டித" என்பதற்கு எட்டு இதழ்களால் சூழப்பட்ட என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். சிவ சன்னிதியில் லிங்கம் ப்ரதிஷடை செய்வதற்கு முன் சிவயந்திரத்தை ( நிலத்தடியில்) வைத்து அதன்மேல் லிங்கம் ப்ரதிஷடை செய்யப்படுகிறது. அஷ்டதள கமலம் வரைந்து அதற்குள் யந்திரம் வரையப்படுகிறது. சிவ யந்திரத்தின் கடைசிசுற்று அஷ்டதள பத்மம்(உண்மையான தாமரை மலர் அல்ல).

தேவியின் ஸ்ரீசக்ரம் வரையும் முறையிலும் அஷ்டதள, ஷோடசதள பத்மங்கள் பற்றிய குறிப்புகள் காணலாம்.

8:44 AM, October 27, 2006
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//குமரன்,
"அஷ்டதளோபரி வேஷ்டித" என்பதற்கு எட்டு இதழ்களால் சூழப்பட்ட என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்//

ஜெயஸ்ரீ அவர்களே,
நீங்கள் சொல்வதே மிகப் பொருத்தமாக உள்ளது; நவ ஆவரணத்தில், அஷ்டதள ஆவரணம், என்பதும் எட்டிதழ் தாமரை தான்(வரைந்தது);
திருமலையில் பெருமாளுக்கும் அஷ்ட தள-பாத-பத்ம-ஆராதனம் என்ற அர்ச்சனை உண்டு!

'வேஷ்டித' என்பதால் 'தாமரை யந்திரம்' எப்படிச் சூழ முடியும்?; அதனால் 'பூக்கள் சூழ்ந்த' என்ற பொருள் கொள்ளும்படி ஆயிற்று.
கவி நயத்துக்காக வேண்டி, இதழ்களை(தளம்), பூக்களாக(தளோபரி) கருதி, அஷ்ட புஷ்பம் என்று சொல்லலாமே அன்றி, சுலோகத்தின் மூலப் பொருள், தாங்கள் சொல்வது தான்.

சுட்டி அறிவுறுத்தி்யமைக்கு மிக்க நன்றி! என் profile-இல் இருந்து ஒரு மின்மடல் தட்ட முடியுமா? தங்களிடம் வேறு ஒரு ஐயத்திற்கும் பொருள் கேட்க எண்ணம்! நன்றி!

8:16 PM, October 27, 2006
--

குமரன் (Kumaran) said...
விளக்கிச் சொன்னதற்கு நன்றி இராகவன்.

7:29 AM, October 29, 2006
--

குமரன் (Kumaran) said...
அப்படிச் சொல்லலாமா என்று தெரியவில்லை கோவி.கண்ணன் ஐயா. ஏதாவது ஒன்றில் குறையிருந்தால் அது மட்டுமே குறை எனக்கூறலாம். எல்லாமுமே குறையாக இருந்தால் தான் அஷ்ட தரித்ரர்கள் என்று கூறலாம் என்று எண்ணுகிறேன்.

7:31 AM, October 29, 2006
--

குமரன் (Kumaran) said...
விளக்கத்திற்கு நன்றி ஜெயஸ்ரீ. இப்போது இன்னும் நன்றாகப் புரிகிறது.

நீங்கள் ஏன் இன்னும் பதிவுகள் எழுதத் தொடங்கவில்லை? இன்னும் நிறைய நாங்கள் தெரிந்து கொள்ளலாமே?

7:32 AM, October 29, 2006
--

ஜெயஸ்ரீ said...
இந்த விளக்கம் பல ஆண்டுகளாக சிவபூஜை செய்யும் பெரியவர் ஒருவர் சொல்லக் கேட்டது. பதிவைப் படிக்கும் போது நினைவு வந்தது. பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே.

8:07 AM, October 29, 2006

சிவமுருகன் said...

சிவமுருகன் said...
//கோவி.கண்ணன் [GK] said...
//அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்//

குமரன் ..! மொழிமாற்றம் நன்றாக இருக்கிறது ! ஆனால் விளக்கம் இல்லாமல் படிப்பதற்கு சுவையாக இல்லை !

எட்டுவகையான ஏழ்மைகள் என்ன என்ன என்று விளக்க முடியுமா ?

//
எட்டு விதமான ஏழ்மைகள் (தாரித்ரியங்கள்) என்று ஏதோ இருக்கின்றன! கடந்தமுறை மதுரை சென்ற போது சில பெரியவர்களிடம் கேட்டேன்,
மீனாட்சி கல்யாணம் (& நல்ல நாள், பௌர்னமி) அதுவுமா ஏன் இதை கேட்கிறாய்? வேறு சந்தர்பத்தில் சொல்கிறேன் என்று எஸ்கேப் ஆயினர்.

குமரன் (Kumaran) said...

இந்த முறையும் இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லையா? :-( கேள்வியைக் கேட்டதற்கு நன்றி சிவமுருகன்.